எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 25 பேர் கைது
எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் நிறுவனர் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு சாலை மறியல் நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது எச்.ராஜா மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 14 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பந்தலூர் பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் 12 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நெல்லியாளம் நகர செயலாளர் கரிகாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதன்பிறகு கூடலூர்- கேரள சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் ஊட்டி ஏ.டி.சி. திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் கட்டாரி தலைமை தாங்கினார். ஊட்டி நகர செயலாளர் தம்பி இஸ்மாயில் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story