முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்


முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

மசினகுடி,

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். இதன் கீழ் முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி. நெலாக்கோட்டை, சிங்காரா, சீகூர், தெங்குமராடா ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. புலிகள் வாழ ஏற்ற வனப்பகுதியாக இருப்பதால், புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள புலிகள் உள்பட வனவிலங்குகள் குறித்து ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா?, அவற்றுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியில் கிடைக்கிறதா? என்பது குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான எந்த வசதியினை வனத்துறையினர் செய்து கொடுக்க வேண்டி உள்ளது என்பது குறித்தும் அறிய முடிகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான 2-வது கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக முதுமலை புலிகள் காப்பக மைய பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது. தெப்பக்காட்டில் உள்ள அரங்கில் நடந்த பயிற்சி முகாமில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். அதில் எவ்வாறு வனவிலங்குகளை கணக்கெடுப்பது, தகவல்களை சேகரித்து பதிவு செய்வது என்பது குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பயிற்சி முடித்தவர்கள் 29 குழுக்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த 29 குழுவினரும் புலிகள் உள்பட அனைத்து வனவிலங்குகளையும் கண்காணித்து கணக்கெடுக்க உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனத்துறை ஊழியர் 2 வேட்டை தடுப்புகாவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வரும் 22-ந் தேதி மாலை வரை வனபகுதியில் தங்கி, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். 23-ந் தேதி தெப்பக்காடு பயிற்சி அரங்கிற்கு திரும்பி வரும் அவர்கள், தாங்கள் சேகரித்த தகவல்களை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் வழங்குவார்கள். இதேபோல புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் 35 குழுவினருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) பயிற்சி அளிக்கபடுகிறது. நேற்று நடந்த பயிற்சி முகாமில் வனச்சரகர்கள் ராஜேந்திரன், சிவக்குமார், சுரேஷ்குமார், தயாநந்தன், விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story