முதுமலை சாலையோரத்தில் சண்டையிட்ட காட்டுயானைகள் - சுற்றுலா பயணிகள் பீதி


முதுமலை சாலையோரத்தில் சண்டையிட்ட காட்டுயானைகள் - சுற்றுலா பயணிகள் பீதி
x
தினத்தந்தி 18 Dec 2018 3:30 AM IST (Updated: 18 Dec 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை சாலையோரத்தில் 2 காட்டு யானைகள் சண்டை போட்டதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தை புலிகள், கரடிகள், செந்நாய்கள் என வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது. வனப்பகுதியில் வாழும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் அடிக்கடி வந்து நிற்பது வழக்கம். இதனை சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நேரத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தல், உணவு அளித்தல் மற்றும் வனத்துக்குள் வாகனங்களை நிறுத்துதல் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மசினகுடி மற்றும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து மைசூருவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கூடலூர் தொரப்பள்ளிக்கும் முதுமலை கார்குடிக்கும் இடையே சாலையோரம் 2 காட்டு யானைகள் வந்தன. திடீரென அவைகள் ஆக்ரோஷமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதியவாறு சண்டையிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நீடித்ததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஏனெனில் எந்த நேரத்திலும் காட்டு யானைகள் சாலைக்கு வந்து விடும் என்ற அச்சத்தால் அந்த வழியாக சாலையை கடக்க டிரைவர்கள் முன்வர வில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 2 யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. பின்னர் ஒரு யானை பின்வாங்கியது.அதை மற்றொரு யானை பின்புறத்தில் முட்டியபடி தள்ளிக்கொண்டே வந்தது. இதனால் வெற்றி பெற்றதாக கருதிக்கொண்ட அந்த யானை, பின்னர் கோபம் தணிந்த நிலையில் வனத்துக்குள் சென்றது. பின்னர் சாலையில் வந்து நின்ற யானையும் சிறிது நேரத்தில் வனத்துக்குள் சென்றது. அதன் பின்னரே அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சீரடைந்தது.

இது குறித்து தெப்பகாடு வனச்சரகர் ராஜேந்திரன் கூறுகையில், மோதிக்கொள்வதுபோல் இரண்டு ஆண் யானைகளும் விளையாடின. அது சண்டைபோடுவது போல் இருந்துள்ளது.

இந்த யானைகள் கடந்த சில தினங்களாகவே தெப்பகாடு வனப்பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்றார்.

Next Story