ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதல்–அமைச்சர் முடிவு செய்வார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதல்–அமைச்சர் முடிவு செய்வார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2018 11:30 PM GMT (Updated: 17 Dec 2018 8:41 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சாய்வுதள நடைபாதை அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் எந்த அரசும் செய்யாத அளவுக்கு திட்டங்களை தற்போதைய அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற ஆண்டு (2019) முதல் 20 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் நடைமுறையில் இருக்கும். இதில் ‘யூஸ்அன்துரோ’ பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தற்போது தடைவிதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். கோர்ட்டின் தீர்ப்புக்கு பிறகுதான் முடிவு தெரியும்.

எல்லா வி‌ஷயத்துக்கும் கொள்கை முடிவு எடுக்க முடியாது. ஒரு சில வி‌ஷயத்துக்கு மட்டுமே கொள்கை முடிவு எடுக்க முடியும். அதனால் இதுகுறித்து ஆராய்ந்து முதல்–அமைச்சர் முடிவு எடுப்பார். செந்தில்பாலாஜி அரசியல் வாதியல்ல. அவர் ஒரு வியாபாரி. எங்கு ஆதாயம் கிடைக்குமோ? அங்கு செல்வார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.


Next Story