தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்ற நியமிக்க கோரி முற்றுகை போராட்டம்
மாநகராட்சி தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்ற நியமிக்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை மாநகராட்சியில் தற்காலிக மற்றும் நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியலை வழங்க கோரி, வேலை வாய்ப்பு அலுவலகத்தை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நியமிக்கப்படும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் புதியவர்கள் என்றும், ஏற்கனவே 2 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் உள்ள நிலையில் அவர்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என்று கோரி கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். இதில், ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து ரத்தினகுமார் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக 2 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். குறிச்சி, குனியமுத்தூர், வீரகேரளம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், துடியலூர், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, காளப்பட்டி, விளாங்குறிச்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் அதில் வேலை பார்த்து வந்த தற்காலிக தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 500 பேரை நியமனம் செய்ய நடைபெற்று வரும் பணி நியமனத்தில், 100 பேர் மட்டும் தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் ஆவார்கள். 400 பேர் புதியவர்கள். எனவே ஏற்கனவே பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், கோரிக்கை தொடர்பான மனுவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story