திருப்பூரில் சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


திருப்பூரில் சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:10 AM IST (Updated: 18 Dec 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அந்த வகையில், திருப்பூர் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் ராமமூர்த்தி நகர் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சன்ஸ்டார் அக்ரோ பார்ம் இண்டியா லிமிடெட் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நாகர்கோவில் வெட்டூர்ணி மடம், கட்டயன்விளை பகுதியை சேர்ந்த பிரவீன் மற்றும் அவருடைய சகோதரர் கிஷோர்பாபு ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்களை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.2 ஆயிரம் வரை பல வருடங்களாக செலுத்தி வந்தோம். 5 வருடங்கள் வரை பணம் செலுத்தினால் 6-வது வருடத்தில் செலுத்திய தொகையை விட அதிக தொகை தருவதாக கூறினார்.

இதை நம்பி பலர் இதில் இணைந்து பணத்தை செலுத்தினோம். இதன்படி சுமார் ரூ.1½ கோடிக்கு மேலாக பணத்தை வசூலித்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சீட்டு நிறுவனத்தை நடத்தி வந்த இருவரும் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். நாங்கள் பணத்தை இழந்து நிற்கிறோம்.

அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story