கோவை கரூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு - குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


கோவை  கரூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு - குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:30 AM IST (Updated: 18 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை- கரூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துரை ரவிச்சந்திரன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், போராட்டக்குழு தலைவர் சதீஷ் மற்றும் கோவையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை முதல் கரூர் வரை 6 வழி பசுமைச்சாலை அமைக் கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதுதவிர ரூ.2,400 கோடி செலவில் கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்போவதாக தெரிகிறது.

இதனால் ஆயிரக்கணக் கான விவசாயிகள் தங்களது விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். சாலை பணிக்காக விவசாய நிலங்கள், கிணறுகள் விவசாயிகள் கண் முன் அழிக்கப்படும். இந்த நிலங்கள் அனைத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொந்தமானது. இதற்கு ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கக்கூட விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிறு போராட்டத்திற்கு கூட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

கைவிட வேண்டும்

விவசாய நிலங்களை அழிக்கும் வகையில் புதியதாக போடப்பட உள்ள கோவை- கரூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள கோவை-கரூர் வரையுள்ள சாலையை விரிவுப்படுத்தலாம். இதற்கு குறைந்த அளவே நிலத்தை கையகப்படுத்த வேண்டியது வரும்.

கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் தெற்கு பகுதியில் உள்ள கரடிவாவி, காரச்சேரி, தொப்பம்பாளையம், அரிசிபாளையம், பாலத்துறை உள்ள சாலைக்கு பதிலாக பல்லடம்- கொச்சி சாலையை விரிவுபடுத்த வேண்டும். எனவே விவசாயிகளின் நலன் கருதி பசுமை வழிச்சாலையை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை இருகூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான நிலஅளவை பணிகள் முடிந்த நிலையில் இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது.

தற்போது அரசு விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.900-ம், வீட்டு மனைகளுக்கு ரூ.1,500-ம் இழப்பீடாக தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படாததால் நாங்கள் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் நிலஅளவை முடிந்துள்ளதால் எங்களது நிலத்தை அடமானம் வைக்கவோ? அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்யவோ முடியாத நிலை உள்ளது. எனவே விரைந்து எங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

கோவை கணபதி விவேகானந்த நகர் இ.பி.காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இ.பி.காலனியில் ஏராளமான குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் எங்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் அங்கேயே அமைத்து தருவதாக கூறினர்.

ஆனால் அதன்பின்னர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. நாங்கள் குடிசை வீடுகளில் வசிப்பதால் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றோம். எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி, அங்கேயே எங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். என்று அதில் உள்ளது.

இந்த கூட்டத்தில் கோவைப்புதூரை சேர்ந்த சத்ரபதி (53) தலைகீழாக கைகளை ஊன்றி வந்து மனு அளித்தார். அந்த மனுவில், எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து குனியமுத்தூரில் உள்ள தருமராஜா திரவுபதி அம்மன் கோவிலில் பரம்பரை பூசாரியாக இருந்து வருகிறோம். மன்னர்கள் காலத்தில் எங்களுக்கு விவசாயம் செய்வதற்கு நிலமும் வழங்கப்பட்டது. இதில் பல ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நாங்கள் விவசாயம் செய்த இடத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் கோவிலில் பூஜை செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. எனவே விவசாய நிலத்தை மீட்டு தருவதோடு, பூஜை செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story