கவுசல்யாவுடன் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்குவதால் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துகிறார்கள்; உடுமலை சங்கரின் உறவினர்கள் புகார்


கவுசல்யாவுடன் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்குவதால் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துகிறார்கள்; உடுமலை சங்கரின் உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

கவுசல்யாவுடன் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்குவதால், எங்களையும், எங்களது உறவினர்களையும் போலீசார் துன்புறுத்துவதாக உடுமலை சங்கரின் உறவினர்கள் கூறுகிறார்கள்.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தில் கலப்பு திருமணம் செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் 13.3.2016 அன்று உடுமலையில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கவுசல்யாவுக்கும் வெட்டு விழுந்தது. சிகிச்சைக்கு பின்னர் கவுசல்யா வீடு திரும்பினார். இதற்கிடையில் கவுசல்யா, குமரலிங்கத்தில் உள்ள சங்கரின் பெற்றோரின் வீட்டில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கவுசல்யாவுடன், வெளியூரை சேர்ந்தவர்கள் தங்குவதால், சங்கரின் உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கவுசல்யா சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சங்கரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து குமரலிங்கத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த தீர்மானங்கள் வருமாறு:-

சங்கர் கொலை செய்யப்பட்ட பிறகு எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். கவுசல்யா எங்கள் வீட்டில் தங்கியபோது பறை இசை பயிற்சி என்று கூறி, எங்களது குழந்தைகளுக்கு பறை இசை பயிற்சி அளித்தார். எங்களுக்கு பறைஇசை அடித்து பழக்கம் இல்லை. இந்த பறை இசை பயிற்சிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பறை இசை பயிற்சியால் அந்த பகுதி பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

மேலும் கவுசல்யா வீட்டில் வெளியூரை சேர்ந்தவர்கள் வந்து தங்குகிறார்கள். சமீபத்தில் 2 பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களை தேடி இரவு நேரத்தில் போலீசார் வந்து, விசாரணை என்ற பெயரில் எங்களையும், அருகில் உள்ளவர்களையும் துன்புறுத்துகிறார்கள். இங்கே வந்து தங்குபவர்களை நல்லவர்களாக இருந்தால் எதற்காக போலீசார் தேடி வரவேண்டும். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். நாட்டில் 80 ஆணவ படுகொலைகள் வெளிச்சத்திற்கு வராமல் மறைக்கப்பட்டது. 81-வது கொலையாக சங்கரின் ஆணவப் படுகொலையை நாங்கள் வெளி உலகிற்கு கொண்டு வந்தோம்.

எங்களுக்கும் கவுசல்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் குடும்பம் தொடர்பான தகவல்களை விசாரணை என்ற பெயரில் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ எங்களிடம் எதுவும் கேட்கக்கூடாது.

தற்போது அரசுக்கும், போலீசாருக்கும் எதிராக குரல் கொடுப்பவர்களை அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே சங்கர் இல்லத்தில் இருந்து கொண்டு ஏதேனும் சிக்கலில் எங்களை மாட்டி விடுவாரோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story