தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா
தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்புச்சிபாளையம் கிராமத்தில், முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், நேற்று காலிக்குடங்களுடன் வந்து, சப்–கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறியதாவது:– குப்புச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரிசனக்காலணியில், 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு, பலர் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எங்கள் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு, அமராவதி ஆற்றில், மொய்யப்பகவுண்டன் படுகை பகுதியிலிருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்கிறார்கள். இதுவரை எங்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கவில்லை. அவ்வப்போது ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகளால் முழுமையாக தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2–முறை குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது இந்த நிலையும் மாறி கடந்த 2 மாதமாக குடிநீர் வழங்குவதே இல்லை. இதனால் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகிறார்கள். கோடை காலமாக இருந்தால் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அதனால் குடிநீர் வழங்க முடியவில்லை என்று அதிகாரிகள் எங்களை சமாதானப்படுத்தி விடுவார்கள்.
கடந்த 2மாதமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது, இந்த நிலையிலும், எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இங்குள்ள அனைவரும் தினக்கூலிகள். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடிநீருக்காக வெகு தொலைவு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் வேலைக்குச்செல்ல முடிவதில்லை. அமராவதி ஆற்றில் புதிய குடிநீர் திட்டம் அமைத்து, எங்கள் பகுதிக்கு தனியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் இந்த பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வருவதாக தெரிவிக்கிறார்கள்.
பிறகு எங்கள் பிரச்சினையை யாரும் கண்டுகொள்வதில்லை. தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் குடிநீர் கேட்டும், மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தும் சப்–கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தை நடத்தினோம் என்று கூறினார்கள்.
தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, பெண்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.