7 பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் தேடப்பட்ட 2 வாலிபர்கள் கைது - மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்


7 பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் தேடப்பட்ட 2 வாலிபர்கள் கைது - மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

7 பஸ்களின் கண்ணாடியை உடைத்த வழக்கில் தேடப்பட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவர் பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ளது அரசு பொறியியல் கல்லூரி. இதன் அருகே செல்லும் கும்பகோணம் சாலையில் கடந்த 11-ந்தேதி மாலை கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது 3 பேர் இரும்பு கோலி குண்டுகளை வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அவர்கள், காடாம்புலியூர், கிருஷ்ணாநகர், கொளஞ்சிக்குப்பம், கொள்ளுக்காரன்குட்டை ஆகிய இடங்களில் மேலும் 6 பஸ்கள், ஒரு கார் மற்றும் மினிலாரி மீதும் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.

ஒரே நாளில் நடந்த இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த ஜம்பு லிங்கம் மகன் சிவசங்கர் (வயது 23), மாற்றுகுடியிருப்பு பி .பிளாக்2-ஐ சேர்ந்த அன்பழகன் மகன் சத்யராஜ்(23), இந்திரா நகர் விரிவாக்கம் சக்திநகரை சேர்ந்த நவீன்(25) என்பது தெரியவந்தது. இவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று டெல்டா பிரிவு போலீசார் மற்றும் காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் மலர்விழி ஆகியோர் காடாம்புலியூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிவசங்கர், சத்யராஜ் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், சிவசங்கர் உள்பட 3 பேரும் பண்ருட்டி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் நெய்வேலி நோக்கி வந்துள்ளார்கள். அப்போது, ஒரு பஸ் அவர்களை உரசிக்கொண்டு சென்றதால், நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து எழுந்து மீண்டும், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளனர். அப்போது, மற்றொரு பஸ் அவர்கள் மீது மோதுவது போன்று வேகமாக வந் துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விளையாட வைத்திருந்த கோலி குண்டுகள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு அந்த வழியாக வந்த பஸ்களின் மீது வீசி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே தலைமறைவாக இருந்த நவீனை போலீசார் தேடி வந்தனர். போலீஸ் தன்னை தேடுவது பற்றி அறிந்த நவீன் நேற்று காலை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கணேஷ் உத்தரவிட்டார்.

பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கில் தொடர்புடையவர்களின் விவரங்களை விரைந்து சேகரித்து அவர்களை கைது செய்த டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.

Next Story