மதுரை அருகே பூமிக்கு அடியில் கண்டெடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள் மீட்பு


மதுரை அருகே பூமிக்கு அடியில் கண்டெடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 5:28 AM IST (Updated: 18 Dec 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

மதுரை,

மதுரை சக்கிமங்கலத்தை அடுத்த சக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள அரசு புறம்போக்கு பகுதியில் பூமிக்கு அடியில் 2½ அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 2 அடி உயரம் கொண்ட 2 பெண் தெய்வ சிலைகள், 1½ அடி உயரம் கொண்ட விஷ்ணு சக்கரம் சிலை, 3 உலோக பீடங்கள் புதைந்து கிடந்தன. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதைந்து கிடந்த சிலைகள் அனைத்தையும் தோண்டி எடுத்தனர். பின்னர் அந்த சிலைகள் அனைத்தையும் சக்குடியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சுத்தப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த சிலைகளை அங்கு வைத்து பூஜைகளையும் நடத்தி வந்துள்ளனர். இந்த தகவல் மதுரை கிழக்கு தாசில்தார் சோமசுந்தரசீனிவாசனுக்கு தெரியவந்தது.

அதன்பேரில் அவர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அரசுக்கு சொந்தமானவை என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பெருமாள் சிலை, பெண் தெய்வ சிலைகள் உள்ளிட்டவற்றை மீட்டனர். அந்த சிலைகள் அனைத்தும் மதுரை கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவை எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையவை? யாரால் செய்யப்பட்டவை? என்பது பற்றி தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story