விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பட்டாசு ஆலை தொழிலாளர்கள்


விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பட்டாசு ஆலை தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 18 Dec 2018 7:27 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க கோரியும் நிவாரணம் கேட்டும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 28 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வந்த 1070 பட்டாசு ஆலைகள் சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை தொடர்ந்து காலவரையின்றி மூடப்பட்டன. ஒரு மாதத்துக்கு மேலாக ஆலைகள் அனைத்தும் மூடிக்கிடக்கிறது. இதனால் இந்த பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பட்டாசு ஆலைகளை உடனே திறக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பட்டாசு– தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நிவாரணம் வழங்கக்கோரியும் வீடுகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட மாரனேரி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம், மீனம்பட்டி, அனுப்பன்குளம், திருத்தங்கல் ஆகிய பகுதியில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு–தீப்பெட்டி தொழிலாளர் சங்க அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடபுரம், திருவேங்கடபுரம் காலனி போன்ற பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் சசிகுமார், ஜெயகுமார், ரேணுகாதேவி, பாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 4 ஊர்களிலும் வீடுகள் தோறும் கருப்புக்கொடியும் ஏற்றப்பட்டது. மேலும் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, அம்மாபட்டி, எம்.துரைச்சாமிபுரம், செவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 28 இடங்களில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள் 900 பேர் கலந்து கொண்டனர்.


Next Story