தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 10:27 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைணவ திருத்தலங்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால் இந்த பிறவியில் புகழ் பெற்று நோயற்ற வாழ்வினை வாழலாம் என்பது ஐதீகம்.

தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்றுஅதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்றுஅதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேசபெருமாள் கடந்தார். பின்னர் பெருமாளுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களும் சொர்க்கவாசலை கடந்து வந்தனர்.


இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் நேற்றுகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை விசே‌ஷ திருமஞ்சன சேவையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசலை கடந்து வசந்த மண்டபத்தை அடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு வசந்த மண்டபத்தில் இருந்து பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

இதேபோல வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிக்கோவில், தெற்குவீதியில் உள்ள கலியுகவெங்கடேசபெருமாள் கோவில், கீழவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்பட தஞ்சையில் உள்ள 8 பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூதலூர் அருகே உள்ள கோவிலடி கிராமத்தில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றான அப்பால ரெங்கநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி செர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலின் பரமபத வாசல் வழியாக வெளியே வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story