திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்; சிறப்பு பார்வையாளர் அறிவுரை
திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு அறிவுறுத்தினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
வருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,028 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது.
இந்த பணிகள் குறித்த விவரங்களை சிறப்பு பார்வையாளர் ஆய்வு செய்தார். முடிவு செய்யப்பட்ட படிவங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கள விசாரணை செய்யப்பட்டுள்ளதா? என்றும், பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் அவர் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். இதற்கு அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சிறப்பு பார்வையாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஷ் பச்சாவு, திருப்பூர் சப்–கலெக்டர் (பொறுப்பு) முருகன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள், தேர்தல் தனிதாசில்தார் முருகதாஸ், அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.