எம்.ஜி.ஆர். சிலை அருகே நள்ளிரவில், அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அதிவிரைவு படையினர் குவிப்பு


எம்.ஜி.ஆர். சிலை அருகே நள்ளிரவில், அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அதிவிரைவு படையினர் குவிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:45 AM IST (Updated: 18 Dec 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனுமதியின்றி ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணிக்காக அதிவிரைவுபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

கடந்த 1995–ம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 8–வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடத்தப்பட்டது. அப்போது புதிய பஸ் நிலையம், ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் என தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 8 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை புதிதாக நிறுவப்பட்டது. அந்த சிலையை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பின்னர் அந்த சிலையை சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று பராமரித்து வந்தது. இந்த நிலையில் அந்த பூங்கா வளாகத்தில் பீடம் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர். சிலையின் பீடம் மோசமான நிலையில் இருப்பதால் புதிய பீடத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட உள்ளதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 அடி உயரம் கொண்ட பீடத்தில் 7¾ அடி உயரம் கொண்ட புதிய ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டு விழா எதுவும் நடத்தப்படாமல் அவசர கதியில் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரின் முயற்சியில் இந்த சிலை திறக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுப்பு தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா சிலை இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர். திடீரென்று அங்கு ஜெயலலிதா சிலை வைக்கப்பட்ட செய்தி தஞ்சை நகர் முழுவதும் பரவியது. உடனே அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர், மாலை வாங்கி வந்து ஜெயலலிதா சிலைக்கு அணிவித்து விட்டு சென்றனர். தொண்டர்களும், பொதுமக்களும் சிலையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.


அதே நேரத்தில் ஜெயலலிதா சிலை திறப்பதற்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது. திடீரென சிலை திறக்கப்பட்டதால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து அறிந்த போலீசார், அதை தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசாரும், அதிவிரைவு படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த சிலை வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா? என மாநகராட்சி ஆணையர் காளிமுத்துவிடம் கேட்டபோது, நான் அலுவலக பணி நிமித்தமாக சென்னைக்கு வந்துள்ளேன். தஞ்சையில் ஜெயலலிதா சிலை திறந்து இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் இப்போது தெரிகிறது என்றார்.

சிலை வைக்க போலீசாரிடம் தடையில்லா சான்று பெறப்பட்டதா? என துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, எங்களிடம் தடையில்லா சான்று பெற்றதாக தெரியவில்லை. உரிய அனுமதி இல்லாமல் தான் சிலை திறக்கப்பட்டுள்ளது என்றார்.


அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களிடம் கேட்டபோது, ரூ.8 லட்சம் மதிப்பில் 7¾ அடி உயர ஜெயலலிதா சிலை ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்டது. இது வெண்கல சிலை இல்லை. பைபர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிலையாகும். சிலையை தயார் செய்து வல்லத்தில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டில் வைத்திருந்தோம். பெரிய அளவில் விழா நடத்தித்தான் சிலையை திறக்க திட்டமிட்டோம். ஆனால் இப்படி அவசரத்தில் சிலையை திறக்க வேண்டிய நிலை திடீரென ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலை வைக்கும்போதே நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று இருக்கிறோம். அந்த இடம் அ.தி.மு.க.விற்கு உரியது. அங்கு சிலை வைத்து பராமரிக்க அனுமதிக்கவும் என்று தான் அனுமதியே பெற்று இருக்கிறோம். அதனால் ஜெயலலிதா சிலையை அகற்ற யாராலும் முடியாது. அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் சிலை வைத்து இருக்கிறோம். அப்படியே, யாராவது எதிர்ப்பு தெரிவித்தாலும் ஏற்கனவே முறையாக பெறப்பட்ட அனுமதி கடிதம் மூலம் அந்த எதிர்ப்பை சமாளிப்போம் என்றனர்.


குற்ற வழக்கில் தண்டனை பெற்றவருக்கு எப்படி சிலை வைக்கலாம் என பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் என்பதாலும், கோர்ட்டில் தடை பெறலாம் எனவும் மாநகராட்சி, போலீஸ்துறை என யாரிடமும் அனுமதி பெறாமல் சிலை திறக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

 அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றப்படுமா? அல்லது எம்.ஜி.ஆர். சிலை அருகே கம்பீரமாக இருக்குமா? என்ற கேள்வி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.

Next Story