நரிப்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்


நரிப்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நரிப்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.

தர்மபுரி,

விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், அரசு வக்கீல் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 23 ஊராட்சிகளில் 1,150 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடி மதிப்பில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,402 லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போன்று விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 27 ஆயிரத்து 199 பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள நரிப்பள்ளி கால்நடை மருந்தகம் மூலம் சென்றாயம்பட்டி, வேடம்பட்டி, பெரியப்பட்டி, மத்திகுலாம்பட்டி, ரங்கன் வலசை, கல்தாணிபாடி மற்றும் சிக்களூர் ஆகிய கிராமங்கள் பயன் பெறும். மக்களின் தேவைகள் என்ன என்பதை தமிழக அரசு அறிந்து அவற்றை பூர்த்தி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக செய்து வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் சின்னதுரை, சம்பத்குமார், கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், மதிவாணன், ஆறுமுகம், தாசில்தார் அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமரவேல், தண்டபாணி, கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர்கள் பாரதி, வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story