புயல் எச்சரிக்கை குறித்து தகவல் கொடுத்த கடற்படை அதிகாரியிடம் அலட்சியமாக பேசிய கிராம நிர்வாக அலுவலர்


புயல் எச்சரிக்கை குறித்து தகவல் கொடுத்த கடற்படை அதிகாரியிடம் அலட்சியமாக பேசிய கிராம நிர்வாக அலுவலர்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே புயல் எச்சரிக்கை குறித்து தகவல் கொடுத்த கடற்படை அதிகாரியிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அலட்சியமாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவெண்காடு,

தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்று முன்தினம் ஆந்திராவில் கரையை கடந்தது. புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் புயலையொட்டி கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்களை, கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும்படி கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். அப்போது அந்த கிராம நிர்வாக அலுவலர் கடற்படை அதிகாரியிடம் அலட்சியமாக பேசிய உரையாடல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அதில், இந்திய கடற்படையை சேர்ந்த ஆனந்த் என்று தன்னை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் புயலையொட்டி கீழமூவர்க்கரை கடலோர பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று முன்எச்சரிக்கை விடுக்கும்படி கூறுகிறார். அப்போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கும்போது இந்த தகவலை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்.

அரசே எங்களை(கிராம நிர்வாக அலுவலர்களை) கண்டு கொள்ளவில்லை, அதனால் நீங்களே தகவல் கூறி விடுங்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் அலட்சியமாக பதில் அளித்து உள்ளார். கிராம நிர்வாக அலுவலரின் இந்த அலட்சிய பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியாகி பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story