ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை -கலெக்டர் தகவல்
ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை,
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:– ஆதிதிராவிடர்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையவதுடன் உரியகாலக் கட்டத்தில் சேர வேண்டும் என்பதற்காக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி துறை அலுவலர்கள் பெறப்படுகிற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக வாழ்வாதாரத்திற்கு தேவையான கோரிக்கைகள் கவனத்திற்கு வரும் போது அதற்கு சிறப்புக் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்போது அதிக அளவில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனுக்கள் வருகின்றன. எனவே அதைக் கவனத்தில் கொண்டு தாசில்தார்கள் விரைந்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அதேபோல் பட்டா வைத்துள்ளவர்கள் வீடு வேண்டி விண்ணப்பித்தால் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் உடனடியாக வீடு கட்டித்தரப்படும். அதேபோல் ஏற்கனவே அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால் அதைப் பராமரிக்க நிதியுதவி அரசு வழங்கி வருகிறது. தேவையானவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மீதும் காவல்துறை, கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏதேனும் காலதாமதம் இருந்தால் அது குறித்து தெரிவித்தால் காவல்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் தாட்கோ மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை தகுதியுடைய நபர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி திட்ட இயக்குனர் வடிவேல், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், புரட்சித்தம்பி, பிச்சை, முத்து உள்பட போலீஸ் அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.