சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஐகோர்ட்டில் மாநகராட்சி பதில் மனு
சென்னையில் கடந்த 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்ததாகவும், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐகோர்ட்டில் மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கழிவுநீர் கால்வாய்களை சரிவர சுத்தம் செய்யாததாலும், பழுதடைந்து, பயன்படுத்தப்படாத கார்கள் உள்ளிட்ட வாகனங்களாலும், டெங்கு கொசுக்கள் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில், வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் டெங்கு கொசுக்களை அழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிவுநீர் கால்வாய்களை தூர்வார ரூ.1,034 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது‘ என்று மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மலை இல்லை
அந்த அறிக்கை படித்து பார்த்த நீதிபதிகள், ‘10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் கொட்டினால், அது மலைபோல காட்சியளிக்குமே? எனவே, அந்த கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை புகைப் படம் எடுத்து தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகளை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது. அந்த கழிவுகள் கொட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டதால், மலைபோல் காட்சியளிக்கவில்லை‘ என்று விளக்கம் அளித்தார்.
515 பேருக்கு டெங்கு
மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் பதில் மனுவும் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாநகராட்சி சுகாதாரத்துறை கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் கடன் கழிவுகளை அகற்றப்படுகிறது. கட்டிட கழிவுகளும் உடனுக்கு உடன் அகற்றப்படுகிறது. கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க 587 தெளிப்பான் எந்திரங்கள் மாநகரம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 8,266 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 4 லட்சம் பேர் சிகிச்சை பெற்றனர். 6 ஆயிரத்து 288 பேருக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இறைவணக்கத்தின்போது மாணவர்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. சென்னை மாநகரில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. மேலும், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கத்துக்கு காரணமானவர்களுக்கு ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது‘ என்று கூறப்பட்டிருந்தது.
எண்ணிக்கை அதிகம்
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பி.சதீஷ்குமார், ‘515 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்று மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்‘ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story