கோவில்பட்டி அருகே கார் விபத்து: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்


கோவில்பட்டி அருகே கார் விபத்து: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:30 AM IST (Updated: 19 Dec 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தடுப்பு சுவரில் கார் மோதல்

மதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் இருந்து பல கோடி ரூபாய் பணம் நேற்று மாலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அந்த வங்கியின் கிளை அலுவலகத்துக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வேனின் முன்பும், பின்பும் 2 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். முதலாவதாக சென்ற வாடகை காரை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் ஸ்டீபன் (வயது 40) ஓட்டிச் சென்றார். அதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பயணம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பெத்தேல் விடுதி அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி நாற்கர சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, அதில் உள்ள இரும்பு தடுப்பு கம்பியில் சரிந்தவாறு நின்றது. இந்த விபத்தில் டிரைவர் ஸ்டீபன் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் (53) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த காரில் இருந்த 2 போலீஸ்காரர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மேலும் பின்னால் அடுத்தடுத்து வங்கி பணத்துடன் வந்த வேன், பின்னால் போலீசார் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் டிரைவர்கள் சுதாரித்து நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஸ்டீபன், சங்கர் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வங்கி பணம்...

தொடர்ந்து வேனில் இருந்த வங்கியின் பணத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழித்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story