‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம்: பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம்


‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம்: பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சென்னை, 

மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவாலயங்களில் திருவாதிரையும் குறிப்பிடத்தக்க விழாக்களாக அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பெருமாள் கோவில் மிக சிறப்புக்கு உரியதாக அமைந்துள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்தகோவில்களில் உள்ள பெருமாளை வழிபட்டு உள்ளனர்.

பெருமாள் தரிசனம்

இங்கு வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விசுவரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்தங்கி, ரத்தின அங்கி அலங்காரத்துடன் மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார்.

சொர்க்கவாசல் திறப்பு

சரியாக காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பார்த்தசாரதி பெருமாள் பார்த்தசாரதி பெருமாள், திருவாய்மொழி மண்டபத்திலுள்ள புண்ணிய கோடி விமானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி கோஷ முழக்கம் எழுப்பினர். நாளை (வியாழக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை மாலை 6 மணிக்கும், 27-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

அகண்ட திரை

கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து சுகாதாரப்பணிகளும், அவசர உதவிக்காக சிறப்பு மருத்துவ குழுக்களும் செயல்பட்டன.

பாதுகாப்பு வசதி

பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

பக்தர்கள் வரிசையில் செல்ல புதிதாக கம்பிகளால் வரிசைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன், டாக்டர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீனிவாச பெருமாள் கோவில்

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி பெருமாள் சிறப்பு புஷ்ப அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே சென்றனர். இதையொட்டி இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தன. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

மயிலாப்பூர் கேசவபெருமாள் கோவில், கொடுங்கையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

Next Story