திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆஜர்


திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆஜர்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:45 AM IST (Updated: 19 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில் சிலைகள் கையாடல் செய்த வழக்கில் ஜாமீன் பெற்ற கூடுதல் ஆணையர் திருமகள், திருச்சி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

திருச்சி,

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மரகதத்தால் ஆன மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகள் மாயமான பிரச்சினையில் கோவில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், எனவே, முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அப்போது கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணியாற்றியவரும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையரான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த திருமகள் (வயது 53) என்பவர், கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் கையாடலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி கூடுதல் ஆணையர் திருமகளை, சிலை கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்திருந்து நேற்று முன்தினம் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது திருமகள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அய்யப்பன், அவரை திருச்சியில் தங்கி இருந்து தினமும் காலை 10 மணிக்கு, அங்குள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், நேற்று காலை 10 மணிக்கு இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆஜராகி, கையெழுத்திட்டார். யார் உதவியும் இன்றி வந்த அவர், கையெழுத்திட்ட உடன்அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். 

Next Story