ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றக்கோரி தூத்துக்குடியில் நாளை தி.மு.க. தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று காலை தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு கொள்கை முடிவு
கூட்டத்துக்குப்பின் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு ஒத்த கருத்து உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று விருப்பப்படுகின்றனர். மக்கள் எண்ணம் உறுதியானது. மக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறோம் என்று மெத்தனமாக இருக்காமல் அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அதனை வழிமொழியும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
இதில் முதல் கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி (அதாவது, நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு உரிய அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அடுத்த கட்டமாக வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்துபேசி கடையடைப்பு போராட்டம் நடத்துவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது போன்ற போராட்டங்கள் நடைபெறும்.
அனைத்து கட்சி தலைவர்களும், முதல்-அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் உள்ளோம். மக்களை தவறுதலாக வழிநடத்திவிடக் கூடாது. அறப்போராட்டம் என்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் எல்லா இயக்கத்தையும் எங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைக்க உள்ளோம். அவர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற அமைப்புகள் எங்களை போராட்டத்துக்கு அழைத்தால் நாங்களும் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story