திருச்செந்தூரில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
திருச்செந்தூரில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட தொழிலாளி
நெல்லை பாளையங்கோட்டை அருகே நொச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி சரசுவதி. இவர்களுக்கு சக்திவேல் (வயது 28) என்ற மகனும், தங்கவேலம்மாள், பகவதி ஆகிய 2 மகள்களும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. பின்னர் பகவதி கணவரை விட்டு பிரிந்து, பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறார்.
சக்திவேல் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுப்பையா உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். பின்னர் சக்திவேலுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார். அவர் இரவில் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் பிளேடால் தனது இடது கையின் மணிக்கட்டு பகுதியில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தாயார் சரசுவதி தன்னுடைய மகள்களுடன் இரவில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் அதற்குள் சக்திவேல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டார். பின்னர் அவர், திருச்செந்தூர்-நெல்லை ரோட்டில் டி.வி.எஸ். ஷோரூம் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாமல் குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர்.
குடும்பத்தினர் கதறல்
அதிகாலையில் திருச்செந்தூர்-நெல்லை ரோட்டில் சென்றவர்கள் மரத்தில் சக்திவேல் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய தாயார் மற்றும் சகோதரிகள், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவருடைய உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story