மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பயிற்சி ஆசிரியர் சாவு ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்ற மூதாட்டியும் பலியான பரிதாபம்


மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பயிற்சி ஆசிரியர் சாவு ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்ற மூதாட்டியும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் பயிற்சி ஆசிரியர், மூதாட்டி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைவாசல்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 24). எம்.எஸ்சி., பி.எட். படித்து உள்ளார். தற்போது சிறுவாச்சூர் அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தினமும் காலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமார் பள்ளிக்கு சென்றார். அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த கந்தாயி (73) என்பவர் ‘லிப்ட்’ கேட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டார். சிறுவாச்சூர் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ் குமார், கந்தாயி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் தலையில் படுகாயம் அடை ந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார் விரைந்து வந்து, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தினேஷ்குமாரின் உடலை பார்த்து, அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

விபத்தில் பலியான கந்தாயி தனது மகன் தன்ராஜுடன் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் பால் கூட்டுறவு சங்க செயலாளராக உள்ளார். இதனிடையே அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, தினேஷ்குமாரின் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்றுள்ளார். அப்போது தான் அவர் விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story