உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் நாராயணசாமி சந்திப்பு; கூடுதல் நிதி தர கோரிக்கை
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு கூடுதல் நிதி தர கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது புதுவை மாநிலத்துக்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் புதுவை மாநிலத்தை 15–வது நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியையும் சந்தித்து பேசினார். அப்போது உள்துறை மந்திரியிடம் வலியுறுத்திய அதே கோரிக்கைகளை அவரிடமும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரியையும் சந்தித்து பேசினார். அப்போது சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுவை துறைமுகத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் விளக்கினார்.
மேலும் புதுவை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்தனர்.