தனியார் காரில் சென்று ஆய்வு: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கிரண்பெடி எச்சரிக்கை


தனியார் காரில் சென்று ஆய்வு: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கிரண்பெடி எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 8:19 PM GMT)

புதுவை போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை குறித்து தனியார் காரில் ரகசியமாக சென்று ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் கூறி வருகிறார். அந்த வகையில் நேற்று தனியார் காரில் சென்று புதுவை நகரப்பகுதியில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பெரும்பாலான போலீசார் பணியில் இல்லாமல் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருப்பது, போனில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் சிக்னல்களும் மிக மோசமான நிலையில் இருந்தன. அதாவது தொலைவில் வருபவர்களுக்கு சிக்னல் தெரியாத அளவுக்கு இருந்தது. சிக்னல் விளக்குகளை மறைத்து விளம்பர பலகைகளும், மரக்கிளைகளும் இருந்தன. சில இடங்களில் சிக்னல் அருகிலேயே ரோட்டினை கடக்கும் வகையில் இடைவெளிகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் கவர்னர் ஆய்வுக்கு சென்றபோது உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் பணியில் இல்லை. மிக நெருக்கடியான நேரத்தில் போதிய விழிப்பின்றி அதிகாரிகளும், போலீசாரும் இருந்ததால் கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பிய அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்தார். அவரது அழைப்பினை ஏற்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டுகள் வம்சீதரரெட்டி, ரச்சனாசிங், இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், முருகையன், ராஜசங்கர் வல்லாட், வரதராஜன், தனசேகரன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு வந்தனர்.

அவர்களிடம் காலையில் தான் ஆய்வு சென்றதையும், அப்போது போலீசார் பணியில் போதிய கவனமின்றி செயல்பட்டது குறித்தும் தெரிவித்து அவர்களிடம் கடும் எச்சரிக்கை விடுத்தார். தனது ஆய்வு தொடரும் என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து விதிமுறைகள் மீறல் குறித்து பொதுமக்கள் 100 மற்றும் 1031 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து தங்கள் புகார்களை திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணிக்கு முன் அனுமதி பெறாமல் வந்து தெரிவிக்கலாம் என்று சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ளார்.

Next Story