உப்பூர் அனல்மின் நிலையத்துக்கு ராட்சத குழாய்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
உப்பூர் அனல்மின் நிலையத்துக்கு ராட்சத குழாய்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொண்டி,
ராமநாதபுரம் அருகே உள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு நாமக்கல்லில் இருந்து ராட்சத இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. தொண்டியை அடுத்துள்ள பழையனக்கோட்டை கிராமம் அருகே ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது அந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது. அப்போது அதில் இருந்த இரும்பு குழாய்கள் சரிந்து சாலையில் விழுந்தன.
இந்த விபத்தில் லாரி டிரைவரான ராசிபுரம் அருகே ஒருவன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார்(வயது 36) என்பவர் காயம் அடைந்தார். அவரை மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழாய்கள் சாலையில் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் சேகர், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் திருவாடானை போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.