குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
தென்காசி,
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
திருவாதிரை திருவிழா
குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
விழாவில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், நிர்வாக அதிகாரி செல்வகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story