பாளையங்கோட்டையில் போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 6 பேர் கைது


பாளையங்கோட்டையில் போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2018 3:00 AM IST (Updated: 19 Dec 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நூதன முறையில் நகை திருட்டு

நெல்லை பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் நாச்சியார் (வயது 65). இவர் கடந்த 1-ந் தேதி கடைக்கு சென்று விட்டு முருகன்குறிச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு, நாச்சியாரிடம் கழுத்தில் நகை அணிந்து செல்லக்கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் நகையை கழற்றி பையில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். இதை நம்பிய நாச்சியார் தான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றி பையில் வைக்க முயற்சி செய்தார். அப்போது அவர்கள் நகையை வாங்கி பார்சல் செய்து கொடுப்பது போல் கொடுத்தனர். அப்போது நைசாக நகையை எடுத்துக் கொண்டு கல்லை வைத்து பொதிந்த காகித பொட்டலத்தை கொடுத்து விட்டனர். சிறிது நேரத்தில் நகையை நூதன முறையில் திருடிச்சென்றது தெரியவந்தது.

6 பேர் கைது

இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஈரோட்டில் கொள்ளை கும்பல் போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடம் நடத்தி விசாரணையில் பாளையங்கோட்டையில் நாச்சியாரிடம் நகை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்- இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் தலைமையில் போலீசார் ஈரோடு சென்று பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஜாபர் உசேன் (61), மைதீன் ஹசன் (35), சமீர் அலி (38), மிர்சா செய்யது (48), அசன் (43) மற்றும் வேன் டிரைவர் முருகேஷ் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நாச்சியாரிடம் பறிக்கப்பட்ட நகையும் மீட்கப்பட்டது.

இவர்கள் தமிழகம் முழுவதும் இதே போல் நூதன முறையில் கைவரிசை காட்டி உள்ளனர். மேலும் இதற்காக வாடகை வேன் எடுத்துக் கொண்டு ஊர், ஊராக சுற்றித்திரிந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story