காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்த மதசார்பற்ற கட்சிகளை சிதறடிக்க முடியாது - தொல்.திருமாவளவன் பேட்டி


காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்த மதசார்பற்ற கட்சிகளை சிதறடிக்க முடியாது - தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2018 10:00 PM GMT (Updated: 18 Dec 2018 8:56 PM GMT)

‘காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்த மதசார்பற்ற கட்சிகளை சிதறடிக்க முடியாது’ என்று கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கோவை, டிச.19-

கோவையில் நடந்த நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன் மொழிந்தது. அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் 3 மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க யுக்திகளை வகுத்து வெற்றி பெற்றுள்ளதால் தகுதி பெற்ற தலைவராக ராகுல்காந்தி உயர்ந்துள்ளார். இதை பொறுக்க முடியாமலும், சகித்துக்கொள்ள முடியாமலும் வாய்க்கு வந்தபடி எச்.ராஜா விமர்சித்து வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பாதுகாப்பு காரணங் களால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மேடையில் உட்கார அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதை வேண்டும் என்றே பெரிதுபடுத்தி காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதி திட்டத்துடன் சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். எச்.ராஜா போன்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும், குட்டிக்காரணம் போட்டாலும் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்த மதசார்பற்ற கட்சிகளை சிதறடிக்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வேதனைக்குரியது. இதற்கு தமிழக அரசு தான் காரணம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையை வைத்துக்கொண்டு போதிய ஆதாரங்களை திரட்டாமல் தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் இந்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. எனவே மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக கூட்ட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையிலும், தமிழக கவர்னர் ஏன் தயங்குகிறார் என்பது குறித்து பா.ஜனதா கட்சி பதில் அளிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணத்துக்காக மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு என்ன செய்தது?. முதல்-அமைச்சரிடம் எவ்வளவு நிதி கொடுத்தது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி எங்கே?. இறுதி அறிக்கை தர வேண்டியது மத்திய குழு தான். புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மோடி ஆறுதல் சொல்வதற்கு கூட தயாராக இல்லை.

இலங்கை அதிபர் சிறிசேனா தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயல் பட்டு வருகிறார். சிறிசேனா தடுமாற்றத்தில் உள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்றாக உறுதியாக நின்று ராஜபக்சேவை பிரதமர் நாற்காலியில் அமர முடியாமல் தடுத்தார்கள் என்பது முக்கியமான வரலாறு.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கோவை வி.கே.கே.மேனன் சாலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 நூல் வெளியீட்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதற்கு பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். இ.மு.சாஜித் வரவேற்றார்.

கூட்டத்தில் நூலை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். இதில் துரை சம்பத், மோகன், அங்ககுமார், இரா.மனோகரன், கோவி.லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகரத் தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story