நாகர்கோவிலில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது


நாகர்கோவிலில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 9:20 PM GMT)

நாகர்கோவிலில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன் தலைமையில் குழு உறுப்பினர்களான உதயசூரியன் (தி.மு.க.- சங்கராபுரம்), பரமசிவம் (அ.தி.மு.க.- வேடசந்தூர்), பாஸ்கர் (அ.தி.மு.க.- நாமக்கல்), பாரதி (அ.தி.மு.க.- சீர்காழி) முகமது அபூபக்கர் (முஸ்லிம் லீக்- கடையநல்லூர்), குழு செயலாளர் சீனிவாசன், சிறப்பு செயலாளர் வசந்திமலர், துணைச்செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி ஆகியோர் நேற்று நாகர்கோவில் வந்தனர்.

பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது. இதில் குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், விஜயதரணி ஆகியோரும் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வரவேற்று பேசினார். சட்டமன்ற பொதுக்கணக்கு குழு செயலாளர் சீனிவாசன் ஆய்வு கூட்டத்தை விளக்கி பேசினார். துரைமுருகன் ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எத்தனையோ ஆய்வு கூட்டங்களை, கருத்தரங்குகளை, மாநாடுகளை பொதுப்பணித்துறையின் சார்பில் நடத்தியிருக்கிறேன். அரசாங்கத்தின் பணம், ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்படுகிற பணம். அதை குறிப்பிட்ட காலத்துக்குள் செலவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் சட்டப்பேரவையின் விதி. சட்டப்பேரவை அங்கீகாரம் இல்லாமல் ஒரு ரூபாய்கூட அரசாங்கம் செலவு செய்ய முடியாது. எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளுக்காக அரசாங்கம் சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் பணம் செலவு செய்துவிட்டாலும் மீண்டும் சட்டமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். அரசாங்கப்பணம் மக்கள் வரிப்பணம். அதை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்று சட்டமன்றம் ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு வேண்டும் என்று கேட்கிறது. திட்டங்களுக்காக ஒதுக்குகிறது. அந்தப்பணத்தை குறிப்பட்ட காலத்துக்குள் செலவு செய்யப்பட வேண்டும். அப்படி செலவு செய்தார்களா? என்று பார்ப்பது இந்த கணக்கு குழுவின் முக்கிய நோக்கம். சிலபேர் ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு காரியத்தில் இருந்து மற்றொரு காரியத்துக்கு மாற்றி செலவு செய்துவிடுவார்கள். அதேபோன்று நிலைமை இருக்கிறதா? என்று பார்ப்போம். அதில் சிலசமயங்களில் தவறும் நடந்திருக்கிறது? அதையும் ஆராய்ந்து பார்ப்போம்.

இவ்வளவும் நானோ, எனது தலைமையில் உள்ள உறுப்பினர்களோ கண்டுபிடிக்கவில்லை. இதையெல்லாம் கண்டுபிடித்து சொல்கிறவர்கள் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவின் அறிக்கையாகும். அந்த தணிக்கை குழுவின் உதவியோடு எந்தெந்த கணக்கை எடுத்து சரிபார்ப்பது? எதை எதை விசாரிப்பது? என்று முடிவெடுத்து அதை நாங்கள் விவாதத்துக்கு கொண்டு வருகிறோம். இதில் பதில் சொல்ல வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள்.

சரியான பதிலை சொன்னால் திருப்தி ஏற்பட்டு சிலவேளைகளில் எச்சரித்து விடலாம். அறிவுரை கூறி விடலாம். ஆனால் சொல்லுகிற பதில் நியாயமாக இல்லாவிட்டால் இந்தக்குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை எடுக்கலாம் என்றால் சஸ்பெண்டு செய்யலாம், பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம், ஏன் வேலையை விட்டே நீக்கிவிடலாம். இந்த குழுவுக்கு அவ்வளவு அதிகாரம் உண்டு. அதற்காக இங்கு யாரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வரவில்லை. இந்தநிலை அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது என்று எச்சரிப்பதற்காகத்தான் சொல்கிறோம்.

இந்த குழுவுக்கு யாராவது அதிகாரிகள் மரியாதை தராவிட்டாலும் அவர்கள்மீது தனிப்பட்ட முறையிலும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. எனவே அதிகாரிகள் தெரிந்ததை சொல்லலாம். உறுப்பினர்கள் கேட்கிற கேள்விக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

குமரி மாவட்டத்தில் நடந்த ஆய்வில் அதிகாரிகளின் தவறு பெரிய அளவில் இல்லை. அறிவுரை சொல்லி, எச்சரிக்கிற அளவில்தான் இருந்தது.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் ராஜகோபால் சுங்கரா (பத்மநாபபுரம்), பவன்குமார் கிரியப்பனவர் (நாகர்கோவில்), மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி நவாஸ்கான் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாலையில் கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் கழக தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினரும், அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

Next Story