நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு


நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலமாகச் சென்று, அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்சாரம், கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இணையதளம் மூலம் சான்றுகள் வழங்க ஏதுவாக கம்ப்யூட்டர், இணையதள வசதி செய்துதர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் தக்கலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து ஆண், பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மத்தியாஸ் வார்டு சந்திப்பு வழியாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது.

ஊர்வலத்துக்கு சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரகாந்த் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஈஸ்வரி, மோகன், ஷிபுகுமார், சுந்தர்ராஜ், ஆன்றனி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வந்தனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் நிர்வாகிகள் செந்தில்குமார், நாகேஸ்வரகாந்த் உள்ளிட்டோர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story