திருப்பாற்கடல், பள்ளிகொண்டா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பாற்கடல், பள்ளிகொண்டா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாற்கடல், பள்ளிகொண்டாவில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் பிரசன்ன பெருமாள் காட்சி அளிப்பது சிறப்பாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாகவும், வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேசபெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர். அப்போது அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர்.

அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் தனது குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை தக்கார் பரந்தாமகண்ணன், செயல் அலுவலர் திருஞானம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பள்ளிகொண்டா பாலாற்றுக்கரையோரம் பிரசித்தி பெற்ற அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாத கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர். கோவிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு ரங்கநாதர் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் போன்று அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் நிலைக்கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 7 மணிக்கு முக்கிய வீதிகளில் பெருமாள் வீதி உலா நடந்தது.

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக மூலவர் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.

இதில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், தங்கமணி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஆவின் தலைவர் வேலழகன், அ.தி.மு.க. நகர செயலாளர் உமாபதி, கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உற்சவ சேவா சங்கம் சார்பில் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், தக்கார் ராமுவேலு, வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) மாதவன், உற்சவ சேவா சங்க தலைவர் முதலையாண்டன், சீனிவாசன், நாராயணன், சுதர்சன், விஜயகுமார், உத்திரரங்கநாதர் கோவில் இளநிலை எழுத்தர் பாபு, மணியம் அரிகரன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.


Next Story