கடலூர் மத்திய சிறையில் இறந்த ரவுடியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் - போலீஸ் குவிப்பு
கடலூர் மத்திய சிறையில் இறந்த ரவுடியின் உடலை பார்க்க உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் ஏழுமலை என்கிற மைக்கேல் (வயது 36). பிரபல ரவுடி. இவர் புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடையவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கொலை முயற்சி வழக்கில் ஏழுமலையை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அன்று இரவு 9 மணி அளவில் கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த ஏழுமலைக்கு நேற்று முன்தினம் காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறைக்காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது பற்றி கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் ஏழுமலையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக கடலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிணவறையில் வைத்தனர். ஆனால் நேற்று மாலை வரை ஏழுமலையின் உறவினர்கள் யாரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கடலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு வந்து, ஏழுமலையின் உடலை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரிடம் விசாரித்தார். மேலும் சிறையில் கைதி இறந்த சம்பவம் தொடர்பாக ஏழுமலையின் உறவினர் களிடம் விசாரிப்பதற்காக கடலூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்வர்சதாத் வந்தார். ஆனால் ஏழுமலையின் உறவினர்கள் யாரும் வராததால் அவர் திரும்பி சென்றார்.
ஏழுமலையின் உறவினர்கள் உடலை அடையாளம் காட்டி கையெழுத்து போடாததால் டாக்டர்களும் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை வரை ரவுடி ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கலும், தாமதமும் ஏற்பட்டது. முன்னதாக பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க கடலூர் அரசு மருத்துவமனை பிணவறை வாளகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இறந்த ரவுடி ஏழுமலையின் அண்ணன் தாதா மணிகண்டன். இவரும் பிரபல ரவுடி. இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ரவுடி ஏழுமலையின் சொந்த ஊரான குயிலாப்பாளையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, ஆரோவில் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப் புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story