3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு என்.எல்.சி.க்கு எதிராக வலுக்கிறது போராட்டம்
3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் வலுக்கிறது.
கம்மாபுரம்,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி நிலக்கரியும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் 3-வது சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கம்மாபுரம், கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி. சமீபத்தில் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கைப்பிடி மண் கூட தரமாட்டோம் என்று உறுதியுடன் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக 40 கிராமங்களில் வசிக்கும் மக்கள், 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீணனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆங்காங்கே என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோ பேக் என்.எல்.சி’ எனவும், ‘என்.எல்.சி. நிர்வாகமே எம் நிலத்தின் கைப்பிடி மண்ணை கூட இனி உனக்கு தரமாட்டோம்’ என்று டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், மின்கம்பங்கள், மரங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிராம மக்களும் ஒன்று கூடி என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் என்.எல்.சி.க்கு எதிர்ப்பை வலுப்படுத்தும் விதமாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் நேற்று கோபாலபுரத்தில் ஒன்று திரண்டு சிறப்பு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றியுள்ள கிராமங்களை கையகப்படுத்தி உள்ளது. ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்கவில்லை. கொடுக்கப்பட்ட மாற்று இடத்திலும் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. எனவே அந்த நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது.
எனவே என்.எல்.சி.க்கு இந்த பகுதியில் ஒரு கைப்பிடி மண் கூட கொடுக்கக்கூடாது என்று பேசினார்கள். இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பி.ஆதனூரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், என்.எல்.சி.க்கு எதிராக கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 3-வது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகத்தை ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டோம், குடியரசு தினத்தன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டுவது, கிராம சபை கூட்டத்தில் என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தீர்மானம் நிறைவேற்றுவது, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story