5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று ஆதார் பதிவு செய்யும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று ஆதார் பதிவு செய்யும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2018 5:30 AM IST (Updated: 19 Dec 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

ஆதார் பதிவு செய்யும் பணியில் இனி அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சென்னை,

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இணை உணவினையும் வழங்கி வருகிறது.

இப்பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்தும் விதமாகவும், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திடும் வகையிலும், அங்கன்வாடி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.59 கோடியே 2 லட்சம் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைபேசிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசிகளை வழங்கி தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆதார் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான பதிவுப் பணிகள் இனி வருங்காலங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் வகையில், 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதி ஏற்படுத்தும் வகையில், ரூ.13 கோடியே 61 லட்சம் செலவிலான கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் எந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1302 ஆதார் கிட்ஸ் களை 434 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவுகள் செய்யும் வசதியும் மற்றும் பொதுமக்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் துறை இயக்குநர் இரா.கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story