டாக்டரை தாக்கி, ஆஸ்பத்திரியை சூறையாடிய 13 பேருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் பால்கர் கோர்ட்டு தீர்ப்பு


டாக்டரை தாக்கி, ஆஸ்பத்திரியை சூறையாடிய 13 பேருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் பால்கர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 5:00 AM IST (Updated: 19 Dec 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

டாக்டரை தாக்கி, ஆஸ்பத்திரியை சூறையாடிய வழக்கில் 13 பேருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பால்கர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வசாய், 

டாக்டரை தாக்கி, ஆஸ்பத்திரியை சூறையாடிய வழக்கில் 13 பேருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பால்கர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஆஸ்பத்திரி சூறை

பால்கர் மாவட்டம் உதாவா கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரியான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி நெஞ்சுவலியால் துடித்த 70 வயது முதியவரை அவரது உறவினர்கள் இங்கு கொண்டு வந்து அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த முதியவர் உயிரிழந்தார்.

சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி, பணியில் இருந்த டாக்டர் சச்சின் மானே என்பவரை பிடித்து நோயாளியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

13 பேருக்கு ஜெயில்

மேலும் ஆஸ்பத்திரிக்கு வந்து இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரியின் காரையும் சேதப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் போயே(வயது28), சந்தீப் காலே(28), தேவ்ராம் லகானே(34), சுனில்(24), தீபக் பிரஜாபதி(27), அப்துல் பதான்(30), பாவேஷ்(31), அனில் காவ்லி (24), ராஜூ சேதே (35), சுரேஷ் குட்டே (19), அனில் குட்டே(23), அனில் சவுத்ரி (29), வினாயக் பவார் (25) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது பால்கர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு 13 பேருக்கும் தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Next Story