9-வது நாளாக நீடித்த வேலை நிறுத்தம் விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி
9-வது நாளாக நீடித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர்.
விழுப்புரம்,
மடிக்கணினியுடன் கூடிய இணையதள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்த 375 பேர், பணிக்கு செல்லாமல் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களின் போராட்டம் நேற்றும் 9-வது நாளாக நீடித்தது. விழுப்புரத்தில் நேற்று காலை கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுதிரண்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் பெரியதமிழன், இணை செயலாளர் கண்ணதாசன், அமைப்பு செயலாளர் இந்திரகுமார் உள்பட 13 தாலுகாக்களிலும் இருந்து வட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து, இவர்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
Related Tags :
Next Story