வானவில் : ஹோண்டா எக்ஸ் பிளேடு


வானவில் : ஹோண்டா எக்ஸ் பிளேடு
x
தினத்தந்தி 19 Dec 2018 1:44 PM IST (Updated: 19 Dec 2018 1:44 PM IST)
t-max-icont-min-icon

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ‘எக்ஸ் பிளேடு’ எனும் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதன் சென்னை விற்பனையக விலை ரூ.86,057 ஆகும். இதில் ஏ.பி.எஸ். வசதி உள்ளது. விருப்பமில்லாதவர்கள் ஏ.பி.எஸ். இல்லாத மாடலையும் வாங்கிக் கொள்ளும் வசதியையும் இந்நிறுவனம் அளிக்கிறது. ஏ.பி.எஸ். வசதி இல்லாத மாடல் விலை சற்றுக் குறைவாகும்.

இதன் முன்புறத்தில் 276 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 130 மி.மீ டிரம் பிரேக்கும் உள்ளது. இது 162.7 சி.சி. திறன் கொண்ட ஏர் கூல்டு மோட்டாரைக் கொண்டது. 13.9 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 13.9 நியூட்டன்மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. இது 5 கியர்களைக் கொண்டதாகும்.

150 சி.சி. முதல் 180 சி.சி. வரையிலான பிரிவில் இந்த மோட்டார் சைக்கிள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று ஹோண்டா நிறுவனத் தலைவர் மினோரு கடோ நம்பிக்கையுடன் கூறுகிறார். மேம்பட்ட வடிவமைப்பு, உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் இளைஞர்களை வெகுவாகக் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீலம், பச்சை, சிவப்பு, சில்வர், கருப்பு என ஐந்து கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

ஏ.பி.எஸ். வசதி உள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விலையை போட்டி நிறுவனமான சுஸுகி ஜிக்ஸர் (ரூ. 87,871) மாடலுக்கு இணையாக நிர்ணயித்துள்ளது. இதேபோல ஏ.பி.எஸ். வசதி கொண்ட ஹோண்டா எக்ஸ்ட்ரீம் மாடல் ரூ. 89,900 ஆக உள்ளது.

Next Story