வானவில் : புதிய அம்சங்களுடன் டாடா டியாகோ எக்ஸ் .இஸட் . பிளஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மாடலான டியாகோவில் புதிய மாடல் எக்ஸ். இஸட். பிளஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் இவை வெளிவந்துள்ளன. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவ்ட்ரான் என்ஜினும், டீசல் மாடலில் 1.05 லிட்டர் ரெவ்டார்க் என்ஜினும் உள்ளது. இரண்டு புதிய வண்ணத்திலும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேன்யன் ஆரஞ்ச், ஓஷன் புளூ ஆகிய நிறங்களில் 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. ஒரே வண்ணம் அல்லது இரட்டை வண்ணங்களில் இதை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம். பெட்ரோல் மாடலில் ஒரே வண்ண காரின் விலை ரூ. 5.57 லட்ச மாகும். இரட்டை வண்ண காரின் விலை ரூ. 5.64 லட்சமாகும். டீசலில் இயங்கும் காராக தேர்வு செய்தால் ஒற்றை வண்ண காருக்கு ரூ. 6.31 லட்சமும், இரட்டை வண்ணத்துக்கு ரூ. 6.38 லட்சமும் தர வேண்டியிருக்கும்.
டாடா மோட்டார்ஸின் டியாகோ மாடல் கார் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இது மிகச் சிறந்த வரவேற்பு பெற்ற காராகத் திகழ்கிறது. இதில் இம்பாக்ட் வடிவமைப்பு பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் இது பார்ப்பதற்கு மிக அழகாகவும், பல்வேறு முன்னேறிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக விற்பனைப் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.என். பர்மன் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 18 விருதுகளை இந்த கார் வென்றுள்ளது. இதையடுத்தே இதில் மேலும் பல முன்னேறிய அம்சங்களை புகுத்தி புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
15 அங்குல அலாய் சக்கரம், கனெக்ட் நெக்ஸ்ட் தொடு திரை வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் வழி செயல்பாடு (ஆண்ட்ராய்டு), டிஜிட்டல் கண்ட்ரோல் வசதி, தானியங்கி முறையில் ஏ.சி.கட்டுப்பாடு ஆகியன இதன் சிறப்பம்சமாகும். அதேபோல புரொஜெக்டர் முகப்பு விளக்கு இதன் தோற்றப் பொலிவுக்கு மேலும் மெருகேற்றுகிறது.
Related Tags :
Next Story