போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் தொழிற்சங்க வாயில்கூட்டத்தில் தீர்மானம்
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்க வாயில்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு போக்குவரத்துகழக பணிமனை முன்பு வாயில்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மத்திய சங்க நிர்வாகி ராஜேந்திரன் கூட்டத்தில் கலந்து கொண்டு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விளக்கி பேசினார். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, ஈட்டிய விடுப்புக்கான தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் விடுமுறை வழங்க வேண்டும்.
பணியில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்காக துறைரீதியான நடவடிக்கைகள் எடுத்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதிப்படைய செய்யும் போக்கை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சீருடைகள் மற்றும் அதற்கான தையல்கூலி தொகையை வழங்க வேண்டும். குளிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்வெட்டர் மற்றும் மலைப்பிரதேச படியை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.