மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தபால் பட்டுவாடா பணிகள் பாதிப்பு


மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தபால் பட்டுவாடா பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 7:47 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டன.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தலைமை தபால் நிலையம், 30 துணை தபால் நிலையங்கள், 233 கிளை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 532 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்திலும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் 300 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதன் காரணமாக நேற்று கிராமப்புற தபால் நிலையங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. தபால் பட்டுவாடா செய்யும் பணி, காப்பீடு வசூல் பணி ஆகியவையும் பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் கிராமப்புற தபால் நிலையங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கின. பல கிராமிய தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

தபால் துறையில் கிராமப்புற பகுதிகளில் பணிபுரிந்து வரும் அஞ்சல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். பணியின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கவுன்சிலிங் மூலமாக இடமாற்றம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் அளிக்கும் அதிகாரத்தை கோட்ட மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்.

கிளை தபால் நிலையங்களில் பணிபுரியும் அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர் அந்தஸ்தை வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைப்படி ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அமல்படுத்த வேண்டும் என்பவை இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தப்படுகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.


Next Story