உயர் மின்கோபுரங்கள் சம்பந்தமான போராட்டத்தில் விவசாயிகள் போர்வையில் மாற்று கட்சியினர் அரசியல் செய்கின்றனர் அமைச்சர் தங்கமணி பேட்டி
‘உயர் மின்கோபுரங்கள் சம்பந்தமான போராட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் மாற்று கட்சியினர் அரசியல் செய்கின்றனர்’ என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு அதிக நஷ்டஈடு வழங்குகிறது. மின்கோபுரம் வரவில்லை என்றால் மின்சாரம் எப்படி வரும், வருடத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது.
24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு வரும் பாதை அமைத்தால் தான் தடையில்லாத மின்சாரம் கொடுக்க முடியும். இதனை அனைத்து மாநிலத்திலும் கொண்டு வந்து விட்டார்கள். தமிழகத்தில் மட்டும்தான் நிறுவ வேண்டியிருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உரிய நஷ்டஈடு வழங்க முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக கூறிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் என்ற போர்வையில் மாற்று கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நாங்கள் மீண்டும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம். மின்சாரத்துறையில் வருகிற 30–ந் தேதி உதவி பொறியாளர்கள் மற்றும் வயர்மேன்களுக்கு தேர்வு நடக்கிறது. அதன்பின்னர் மீதமுள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர்கள் கே.வி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.