நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி நூல் வியாபாரி சாவு மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி நூல் வியாபாரி பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளி,
திருப்பத்தூரில் உள்ள ஆரிப் நகரை சேர்ந்தவர் இக்பால் (வயது 68). இவர் நூல் வியாபாரம் செய்து வந்தார். நாட்டறம்பள்ளி பகுதியில் நூல் விற்பனை செய்வதற்காக இக்பால் நேற்று திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சபரிமலைக்கு சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இக்பால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு கூடினர். பின்னர் அவர்கள் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைகின்றனர். எனவே, இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசார், இக்பால் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story