மாயார் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் சீகூர் நீர்வீழ்ச்சி


மாயார் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் சீகூர் நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 20 Dec 2018 3:30 AM IST (Updated: 19 Dec 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

மாயார் வனப்பகுதியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மசினகுடி,


மலைப்பிரதேசமான நீலகிரியில் கல்லட்டி, காட்டேரி, மாயார், கேத்ரீன், லேம்ஸ்ராக், சீகூர் உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவைகளை நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, செல்கின்றனர். இவற்றில் மாயார் மற்றும் சீகூர் நீர்வீழ்ச்சிகள் வனப்பகுதிக்குள் உள்ளன. இதனால் இந்த நீர்வீழ்ச்சிகளை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பக மைய பகுதியில் உள்ள மாயார் நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து, வாகனத்தில் இருந்தபடியே நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர்.இந்த நிலையில் தற்போது மாயார் வனப்பகுதியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மசினகுடியில் இருந்து தனியார் ஜீப்பில் சீகூர் நீர்வீழ்ச்சியை காண வனத்துறையினர் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த ஜீப் சவாரியில் 5 நபர்களுக்கு ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

வனப்பகுதியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியை காண பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 1000 அடி உயரத்தில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண்பது மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அருகில் செல்ல முடியவில்லையே என்பதுதான் வருத்தம். பசுமையான மலைப்பகுதிக்கு நடுவில் வெள்ளியை உருக்கி கொட்டுவதை போல சீகூர் நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story