திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேர் கைது லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல்


திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேர் கைது லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:15 AM IST (Updated: 20 Dec 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் மாடுகளை திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 9 மாடுகள் மற்றும் லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் பகுதியில் மாடுகளை திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 9 மாடுகள் மற்றும் லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாடுகள் திருட்டு

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மாடுகள் திருடு போனது. இதையடுத்து திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் சண்முகபுரம்-ராணிமகராஜபுரம் ரோட்டில் சந்தேகப்படும்படியாக லோடு ஆட்டோவில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த ஹனிபா (வயது 50), வீரபாண்டியன்பட்டினம் காந்தி நகரைச் சேர்ந்த கந்தன் (42), ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த காசி (46), மணக்கரை ரெட்டியார் தெருவைச் சேர்ந்த முருகேசன் (45) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் மாடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

9 மாடுகள் பறிமுதல்

இவர்கள், திருச்செந்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்த செல்லச்சாமி (35), திருச்செந்தூரைச் சேர்ந்த சின்னத்துரை (32), திருச்செந்தூர் அருகே கீழ நாலுமூலைக்கிணறைச் சேர்ந்த ஆனந்த் (44), தளவாய்புரம் ஆறுமுகபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (58), திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து (51), வீரபாண்டியன்பட்டினம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நகரைச் சேர்ந்த சுடலை (45), வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சேர்ந்த மாடசாமி (49), வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரைச் சேர்ந்த குருசாமி (62), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சுசீலா (49) ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 16 மாடுகளை திருடி, அவற்றை பல்வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த 9 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக தலைமறைவான மணக்கரையைச் சேர்ந்த மணி, நாசரேத்தைச் சேர்ந்த செந்தில்குமார், நெல்லையைச் சேர்ந்த மாடசாமி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான ஹனிபா, கந்தன், காசி, முருகேசன் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று திருச்செந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஹனிபா உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Next Story