கழுகுமலையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
கழுகுமலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கழுகுமலை,
கழுகுமலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
கழுகுமலை நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). இவர் கழுகுமலை கீழ பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் ஆலோசனையின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, முருகேசன் (கோவில்பட்டி), நாகசுப்பிரமணியன் (கயத்தாறு) ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் மாரியப்பனின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடையில் 3 பண்டல்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடைக்கு ‘சீல்’ வைப்பு
முன்னதாக கடந்த 15-ந்தேதி கழுகுமலை போலீசார், இவரது கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது கடையில் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் சென்று அபராதம் செலுத்தினார்.
தொடர்ந்து அவரது கடையில் மீண்டும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால், அவரது கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த கடை உரிமத்தையும் ரத்து செய்தனர்.
Related Tags :
Next Story