இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி: கைதான திண்டிவனம் இஸ்மாயில் உள்பட 7 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை பணம்,ஆவணங்கள் பறிமுதல்
இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி செய்ததாக கோவையில் கைது செய்யப்பட்ட திண்டிவனம் இஸ்மாயில் உள்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம்,செல்போன் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம்,
கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்தி சேனா என்ற அமைப்பின் நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சிலர் சதி செய்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கோவை ரெயில் நிலையம் அருகே ஒரு கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்கள், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, ஓட்டேரி சலாவுதீன், பல்லாவரம் சம்சுதீன், திண்டிவனம் இஸ்மாயில் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவை என்.எச்.ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் ஆகியோர் ஆவர்.
இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக சேர்ந்து சதி செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அர்ஜூன் சம்பத், அன்பு மாரி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த தகவல்கள் வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் அவர்களை கொல்ல திட்டமிட்டதாக 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இந்த 5 பேரின் சதி செயலுக்கு உடந்தையாக இருந்ததாக உக்கடம் வீரவாஞ்சிநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் என்ற சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளில் கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கோவை போலீசார் கடந்த செப்டம்பர் 3-ந்தேதி திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதி இஸ்மாயிலை பலத்த பாதுகாப்போடு கோவையில் இருந்து திண்டிவனத்துக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் இஸ்மாயில் பயன்படுத்திய கணினியை ஆய்வு செய்து, அதில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை போலீசார், 7 பேரிடம் விசாரணை நடத்திய 1,500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், இந்த சதி திட்டத்தையும் தனியாக வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் கடந்த வாரம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அப்போது தங்களுக்கு ஏற்கனவே பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கான ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திண்டிவனத்தில் அதிரடி சோதனை
இதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 7 பேரின் வீடுகளிலும் நேற்று ஒரேநாளில் அதிரடி சோதனை நடத்தினர். கைதானவர்களில் திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் ரகசிய உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால் அவரிடம் அது தொடர் பாக மேலும் தகவல்களை திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாஜகான், இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஒரு காரில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு முன்னிலையில் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கின
காலை 11 மணி வரை நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவை அனைத்தையும் ஒரு சூட்கேஸ், டிராவல் பேக், ஒரு கட்டை பையில் போட்டு எடுத்து கொண்டு தாங்கள் வந்த காரில் ஏறிச் சென்றனர். சோதனை நடைபெற்றபோது, வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இந்த அதிரடி சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கோவை என்.எச்.ரோடு சந்திரன் வீதியில் உள்ள ஆசிக்கின் வீடு, உக்கடம் மஜித்காலனி வீரவாஞ்சிநகரில் உள்ள பைசலின் வீடு, குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலையில் உள்ள சாகுல்அமீது ஆகியோரின் வீடுகளுக்கும் தனித் தனி குழுவாக சென்று நேற்று காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை 4 மணிநேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை உக்கடத்தில் உள்ள ஆட்டோ பைசல் வீட்டில் இருந்து 21 செ.மீ. நீளமுள்ள ஒரு கத்தி, ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் ரொக்கப்பணம், 3 செல்போன்கள், மத ரீதியான ஆவணங்கள், பல்வேறு அமைப்புகளின் கடிதங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பைசலின் திருமணத்திற்கு வைத்து இருந்தது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் அதனை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குனியமுத்தூரில் சாகுல் அமீது வீட்டில் இருந்து பத்திரிகை செய்தி தொடர்பான ஆவணங்கள். சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆசிக் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் தொடர்பான ஆவணம் மட்டும் கைப்பற்றப்பட்டது.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 7-வது தெருவில் உள்ள ஜாபர் சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி தர்கா தெருவில் உள்ள சலாவுதீன் ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தினார்கள். இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி செய்தது ஏன்? அவர்களுக்கு வேறு ஏதாவது அமைப்புகளுடன்தொடர்பு உள்ளதா? கொலைக்கான பின்னணியில் தீவிரவாத கும்பல் உள்ளதா? ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களை அறிய இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை எம்.கே.பி.நகர் ஜாபர் அலி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது வீட்டில் இருந்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜாபர் அலி குறிப்பிட்ட அமைப்பு ஒன்றில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அவர் யார் யாரிடம் தொடர்பில் இருந்தார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 7 பேரும் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் திடீர் சோதனை திண்டிவனம், கோவை மற்றும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story