மரக்காணம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
மரக்காணம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 38). இவர் நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த கந்தன் (35), ராமமூர்த்தி (32), அரங்கநாதன் (59) ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் மீன் பிடித்துக்கொண்டு மீண்டும் கரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அலையில் சிக்கிய படகு நிலைதடுமாறியதில் எதிர்பாராதவிதமாக படகில் இருந்து கந்தன் தவறி கடலுக்குள் விழுந்தார்.
இதனை பார்த்த சக மீனவர்கள் அவரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் முடியாததால் கந்தன், கடலில் மூழ்கி மாயமாகி விட்டார்.
இதுபற்றி அவர்கள் கரைக்கு வந்ததும் கந்தனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கூறினர். மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கி மாயமான கந்தனின் கதி என்ன? என்று தெரியாததால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் கடலோர காவல் படையினர், கந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story